Thursday, June 30, 2011

’கூடங்குளம் அணு உலையால் தென் மாவட்டங்களுக்கு ஆபத்து’- வைகோ

   நெல்லை மாவட்டம் திசையன்விளையில் மதிமுக 18ம் ஆண்டு துவக்க விழா மற்றும் அரசியல் பிரகடனம் பொதுக்கூட்டம் நேருஜி திடலில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது,

”நான் மதவாதத்தை ஏற்றுக் கொள்ளாதவன். ஈழத்தமிழர்களுக்கு வாஜ்பாய் செய்த உதவியை வேறு எவரும் செய்யவில்லை. விஷபூச்சிகள், நாகபாம்புகள், பண்டாரம், பரதேசிகள் என்று விமர்சித்த திமுக மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு தெரிவித்தது. ஜெயலலிதா இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி பிரபாகரனை கைது செய்து கொண்டு வரவேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தபோது இதற்கு நான் கண்டன அறிக்கை வெளியிட்டேன். நான் விடுதலை புலிகளை நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன்.”

”மதிமுக இருப்பது தமிழ்நாட்டிற்கு நல்லது. தமிழர் உரிமைக்கு நல்லது. முல்லை பெரியார், காவிரிக்காக போராடும். ஸ்டெர்லைட், கூடன்குளம் அணு உலையை எதிர்த்து போராடும். கூடன்குளம் அணு உலை அமைக்க அறிவிப்பு வந்தபோது பார்லிமென்டில் அதனை எதிர்த்து பேசிய ஒரே எம்.பி.நான் மட்டும்தான். கடல் கொந்தளிப்போ, நில அதிர்வோ, பூகம்பமே ஏற்பட்டு கூடன்குளம் அணு உலைக்கு ஆபத்து ஏற்பட்டால் தென்மாவட்டங்கள் அழிந்துபோகும். ஐரோப்பிய நாடுகளில் அணு உலைகள் மூடப்பட்டு கொண்டிருக்கின்றன.

       கூடன்குளம் மின்சாரத்தை கேரளாவுக்கும், ஆந்திராவுக்கும் மற்ற மாநிலங்களுக்கும் தந்து எங்கள் தலையில் கொள்ளி வைத்து, இதை நாங்கள் சுமக்கணுமா?

       இலங்கையில் சிங்களனுக்கு துணையாக சீனாவும், பாகிஸ்தானும் வந்துவிட்டது. நம் இந்திய மீனவர்கள் இன்றும் தாக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 543 மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் 800 பேர் காணாமல் போய்விட்டனர். தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இலங்கையின் கடற்படை இங்கு வந்து தாக்க இந்திய இலங்கை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம்தான் காரணம்.

      அன்றைய முதல்வரும் கடிதம் எழுதினார். இன்றைய முதல்வரும் கடிதம்தான் எழுதுகிறார். ஆனால் இந்திய பிரதமர் இலங்கை கடற்படைக்கு ஒருமுறை கூட எச்சரிக்கை செய்தது கிடையாது.”

    ”கேரள முதல்வர் முல்லை பெரியார் அணையை கட்டுவோம் என்கிறார். இதை மத்திய அரசு அனுமதித்தால் அன்றைய தினமே ஒருமைப்பாடு உடைந்துபோகும். கேரள மக்களை நான் நேசிக்கிறேன். அங்கு கடல், நதி, நீரோடைகள் வளம் உண்டு. ஆனால் விவசாயத்திற்கு காணி நிலம் கிடையாது. தமிழ்நாடு தான் அரிசி, பால், காய்கறிகள் தரவேண்டும். எங்களுக்கு கேடு செய்துவிட்டு நீ எப்படி இருக்க முடியும். முல்லை பெரியார் அணை விஷயத்தில் மத்திய அரசு ஒரு எச்சரிக்கை கொடுக்க வேண்டும்.

       இலங்கையில் எங்களது பெண்களை கற்பழித்து கொன்றுள்ளார்களே எங்காவது ஒரு சிங்களப் பெண்ணையாவது விடுதலை புலிகள் பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று ராஜபக்ஷே குற்றம் சாட்டியது உண்டா? அப்படி நிருபிக்கப்பட்டால் நான் தமிழ் ஈழத்தை ஆதரித்து பேசுவதை விட்டு விடுகிறேன். நாங்கள் தமிழர்களாக பிறந்தததை விட என்ன பாவம் செய்தோம். நாங்களும் ஒருநாள் அரசின் அதிகாரத்தை வெல்வோம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம்” என்றார்.

0 comments:

Post a Comment

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons