அமெரிக்கர்களை முட்டாளாக்க, தாவூத் இப்ராகிம்-பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளதாக அமெரிக்க இணையதளம் பரபரப்பு தகவல்
வாஷிங்டன்: உலகிலேயே மிக மோசமான பயங்கரவாதிகளான அய்மேன் அல் ஜாவாஹிரி, சிராஜ் ஹக்கானி, மேஜர் இக்பால், சஜித் மிர் மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகியோரை கைது செய்வதில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., கவனம் செலுத்த வேண்டும் என, அமெரிக்க வெளியுறவு கொள்கைகள் தொடர்பான இதழின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது: உலகின் நம்பர் ஒன் பயங்கரவாதியான ஒசாமா பின்லாடனை சுட்டுக் கொன்ற பின், அவரைப் பற்றி அமெரிக்காவின் உளவுப் பிரிவுக்கு தகவல் கொடுத்தவர்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., கண்டுபிடித்து கைது செய்துள்ளது. மிக விரைவில் இதைச் செய்துள்ளது. அதே நேரத்தில், உலக நாடுகளால் தேடப்படும், பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் மிக மோசமான பயங்கரவாதிகளை மட்டும் ஐ.எஸ்.ஐ.,யால் கண்டுபிடிக்க முடியவில்லை. பாகிஸ்தானில், பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளான அய்மேன் அல் ஜாவாஹிரி, சிராஜ் ஹக்கானி, மேஜர் இக்பால், சஜித் மிர் மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகியோரை, ஐ.எஸ்.ஐ., கைது செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
மும்பையில், 2008ம் ஆண்டில் நடந்த தாக்குதலில் தொடர்புடைய சஜித் மிருக்கு, லஷ்கர்- இ- தொய்பா மற்றும் ஐ.எஸ்.ஐ.,யுடனும் தொடர்பு உண்டு. ஆனால், இதை ஐ.எஸ்.ஐ., மறுத்து வருகிறது. மும்பை சம்பவத்தில், அமெரிக்காவின் டேவிட் ஹெட்லியை, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட வலியுறுத்தியவரும்
சஜித் மிர் தான். சஜித் பேசிய தொலைபேசி உரையாடலில் இருந்து இது தெரிய வந்துள்ளது. இப்போதைய அல்-குவைதா தலைவர் அய்மேன் அல் ஜாவாஹிரியும், ஆப்கானிஸ்தானில், அமெரிக்கப் படைகளுக்கு எதிராக ஆயுதங்கள் வழங்கி, பயங்கரவாதிகளை பணியில் அமர்த்திய சிராஜ் ஹக்கானியும் பாகிஸ்தானில் தான் பதுங்கி இருக்கின்றனர். 2008ல், மும்பையில் தாக்குதல் நடத்த மேஜர் இக்பால் தான் நிதி உதவி அளித்ததாக அமெரிக்காவில் கைதான டேவிட் ஹெட்லி தெரிவித்துள்ளார்.
மும்பையில், 1993ல் நிகழ்ந்த தொடர்ந்த தொடர் குண்டு வெடிப்பில் ஏராளமான அப்பாவி மக்கள் பலியாயினர். இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி தாவூத் இப்ராகிமும் பாகிஸ்தானில் தான் மறைந்திருக்கிறார். அவர் தன் அடையாளத்தை மறைப்பதற்காக, முகத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இவருக்கும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.,யுடன் தொடர்பு உள்ளது. இவர்களை எல்லாம் பிடிப்பதில் ஐ.எஸ்.ஐ., தீவிர கவனம் செலுத்த வேண்டும். மிக விரைவாக இதைச் செய்ய வேண்டுமென இணையதளத்தில் கூறப்பட்டு உள்ளது .
0 comments:
Post a Comment