சேலம் : சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் பாடங்களை கிழிக்கவும், மையிட்டு அழிக்கவும் கத்திரிக்கோல், ஸ்டீல் ஸ்கேல், பிளேடு, கருப்பு மார்க்கர் பேனாவுடன் இன்று ஆஜராகும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிழிக்கும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை இந்த ஆண்டும் தொடரலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்காக அச்சிடப்பட்டுள்ள சமச்சீர் கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சிலரது கவிதைகள் இடம் பெற்றுள்ள பக்கங்களை கிழிக்கவும், சில பக்கங்களை கருப்பு மையால் மறைக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புத்தகத்தின் பின்பக்கத்தில் உள்ள செம்மொழி மாநாடு லோகோவை பச்சை நிற ஸ்டிக்கரால் மறைக்கவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பச்சை நிற ஸ்டிக்கர்களை தேவையான அளவு பள்ளிக்கல்வித் துறையே ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளது.
ஆனால் பக்கங்களை கிழிப்பதற்கு தேவையான பிளேடு, கத்திரிக்கோல், பாடங்களை மறைக்க கருப்பு நிற மார்க்கர் பேனா, ஸ்டீல் ஸ்கேல் ஆகிய பொருட்களை ஆசிரியர்களே கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
பல மாவட்டங்களில் ‘கிழிப்பு’ பணி நேற்றே தொடங்கியது. ஒன்றரை கோடி புத்தகங்கள் இருப்பதால் ஒரேநாளில் பணி முடியவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் புத்தக கிழிப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘ஆசிரியர்களை கத்திரிக்கோல், பிளேடு கொண்டு வரச் சொல்வது அநாகரீகமாக உள்ளது. புத்தகங்களை கிழிக்கும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஏ.இ.ஓ.க்கள் வாய்மொழியாக எச்சரித்துள்ளனர்’’ என்றனர்.
0 comments:
Post a Comment