தற்போது மிகுந்த சர்ச்சையில் உள்ள உத்தேச லோக்பால் மசோதாவின் விசாரணை வரம்புக்குள் பிரதமரைச் சேர்க்கக் கூடாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் ‘பிரதமர் ஏற்கனவே ஊழல் தடுப்புச் சட்ட வரம்புக்குள் சேர்க்க்பபட்டுள்ளார். பிரதமர் தவறு செய்தால், சிபிஐ விசாரிக்க முடியும். சில நேரங்களில், லோக்பால் அமைப்பைப் பயன்படுத்தி, அரசை ஸ்திரமற்றதாக்க வெளிநாட்டு சக்திகள் முயற்சிக்கலாம்’ என்றார் ஜெயலலிதா.
கடந்த ஆண்டு, காங்கிரஸுக்கு ஆதரவளிப்பதாக தான் தெரிவித்தது அந்தச் சூழ்நிலையில் தெரிவித்த கருத்து என்று ஜெயலலிதா கூறினார். அதே நேரத்தில், எதிர்காலத்தில் காங்கிரஸுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு ஜெயலலிதா, அதை இப்போது சொல்வது கடினம் என்றும், அரசியலில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸுடன் இருந்த கசப்புணர்வு குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, கடந்த காலத்தை தோண்டிப்பார்க்கக் கூடாது என்றும், அரசியலில் அனுபவமும் முதிர்ச்சியும் ஏற்படும்போது, நிலைமையை எப்படி சமாளிப்பது என்று கற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
வரும் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பே இடைத் தேர்தல் வருவதற்கும், அரசியலில் அணி மாற்றங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்தார்.
கடந்த திமுக அரசால் கொண்டுவரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை ரத்து செய்துவிட்டது குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, மக்களுக்குப் பயனடையும் திட்டங்களை ரத்து செய்யவில்லை என்றும், அரசுப்பணத்தை வீணடிக்கும் திட்டங்கள் மற்றும் திமுகவினர் பலன்பெறுவதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மட்டுமே ரத்து செய்ததாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பது தொடர்பாகவும், கச்சத்தீவை மீட்பது தொடர்பாகவும் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
0 comments:
Post a Comment