Saturday, July 30, 2011

சௌதியில் பிறைவந்தால் தான் மலப்புரத்தில் ரமலான் ஆரம்பமாகும் விநோதம்..!



உலகெங்குமுள்ள இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் மாதம். இம்மாதத்தில் முதல் பிறைகண்ட பின்னரே புனித நோம்பு ஆரம்பமாகும்.

உலகில் பல தரப்பட்ட இடங்களில், பிறையின் தோற்றத்தில் மாறுபாடு தெரியுமாதலால்,  இந்த தெளிவின்மையை தவிர்பதற்காக, இஸ்லாமியர்கள் தாங்கள் வாழும் இடத்தில் பிறை தோன்றிய பின்னர் தான் ரமலான் நோன்பை ஆரம்பிப்பது ஐதீகம்.

இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் இந்தியாவில் தோன்றும் பிறைகண்டும், பாகிஸ்தானில் வாழும் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானில் தெரியும் பிறைகண்டும், சௌதியில் வாழும் இஸ்லாமியர்கள் சௌதியில் தோன்றும் பிறைகண்டபின்னரும் நோன்பை ஆரம்பிப்பார்கள்.

இதற்கு விதிவிலக்காக, கேரளா மலப்புரத்தில் வாழும் இஸ்லாமியர்கள், இந்தியாவில் ரமலான் பிறை தோன்றினாலும் சரி தோன்றாவிட்டாலும் சரி, சௌதியில் பிறை தோன்றியபின்னர் தான் ரமலான் நோம்பை ஆரம்பிக்கிறார்கள்.

இது இஸ்லாத்திற்கு ஒத்த காரியமா என்பதை இஸ்லாத்தின் வேத வல்லுநர்கள் தான் கூறமுடியும்.

இன்று இரவு பிறை தெரியாத காரணத்தால், நாளை மாலையில் தெளிவாக தெரியும் எனவே திங்கள் கிழமை ரமலான் ஆரம்பமாகும் என்று பஹ்ரைன் அஸ்ட்ரனாமிகல் சொஸைடி அறிவித்துள்ளது. இதுவே  சௌதி அரேபிய அஸ்ட்ரனாமிகல் சொஸைடியின் டெபுடி சேர்மன் ஷரப் அல் ஸுஃபானியின் கருத்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழுகைக்கு டிமிக்கி கொடுக்கும் சௌதி அலுவலகப் பெண்கள்..!



இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றாகிய ஐவேளை தொழுகையை நிர்பந்தப்படுத்தியாவது தொழவைக்கும் சௌதிஅரேபியாவில், அலுவலகத்தில் பணிபுரியும் சௌதிப் பெண்கள், வேலை நேரத்தில் வரும் தொழுகைகளை தவிர்க்க முயற்சிக்கிறார்கள்.

சௌதி அரேபியாவில், அலுவலகங்களில் பணிபுரியும் இஸ்லாமிய பெண்கள், ‘துஹ்ர்’ மற்றும் ‘அஸ்சர்’ தொழுகைகளை கடைபிடிக்காமல் தவிர்க்க முயல்வதாக ரியாத்திலிருந்து வெளிவரும் ‘அராப் நியூஸ்’ செய்தி நாளிதழ் நடத்திய சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

அதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுவது..மேக்கப்!

பெண்கள் பணிபுரியும் இடங்களில், தொழுகைக்கு முன் செய்யப்படவேண்டிய உடல் சுத்திகரிப்பு(வஸூ)க்காக மேக்கப்பைக் களையவும், தொழுகை முடிந்தபின் மேக்கப் செய்துகொள்வதற்கு போதிய இடவசதி அலுவலகங்களில் கொடுக்கப்படாததாலும், முக அழகை களையவும் மீண்டும் இட்டுக்கொள்வதற்கு நேரம் அதிகம் எடுத்துக்கொள்வதால் அலுவலக வேலைகள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டும், பெரும்பாலான பெண்கள் தொழுகையை கடைபிடிப்பதில்லை என சர்வேயின் முடிவு தெரிவித்துள்ளது.

நீண்டதூரம் பயணம் செய்கிறவர்கள், தொழுகையை தவற விடாமல் இருப்பதற்காக , நெடுஞ்சாலையி ஓரங்களில் இருக்கும் பெட்ரோல் பங்க்குகள், சிற்றுண்டி சாலைகளோடு தொழுகைக்கான இடமும் அமைக்கப்பட வேண்டும் என்பது சௌதி சட்டம், என்பது இங்கு குறிப்பிடப் படவேண்டிய ஒன்றாகும்.

Friday, July 29, 2011

பத்மநாபஸ்வாமி கோயிலின் பாதுகாப்பில் ‘செயலிழந்த பாதுகாப்புக் கருவிகள்’...!



திருவனந்தபுரம். ஜூலை 30-
ஒரு லட்சம் கோடிக்கு ரூபாய்க்கு அதிகமான பொக்கிஷங்களை கொண்டிருக்கும் கேரள பத்மநாபஸ்வாமி  கோயிலின் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ள நான்கு மெட்டல் டிடெக்டர் கருவிகள் பழுதுபட்டிருப்பதை, கேரள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை, பத்மநாபஸ்வாமி கோயிலின் பாதுகாப்பு நடவடிக்கைகளை சோதனை செய்வதற்காக கூடுதல் டி.ஜி.பி வேணுகோபால் நாயர் சென்ற போது, மெட்டல்டிடெக்டர்கள் வேலை செய்யாது இடையிடையே நின்றுபோவதை கண்டு தெரிவித்திருக்கிறார்.

கோவிலின் நான்கு பிரதான நுழைவு வாயில்களில் வைக்கப்பட்டுள்ள நான்கு மெட்டல் டிடெக்டர்களில் 2 வேலை செய்யவில்லை. மற்ற இரண்டிலும் சிறு சிகப்பு விளக்குகள் எப்போதும் எரிந்தவண்ணம் இருக்கிறது. இதை சமீபத்தில் ஆசியா நெட் சேனல் வெளிப்படுத்தியிருந்தது.

இந்த கோவிலை கவனித்துக்கொள்வதற்கு சிறப்பு கமிட்டி ஒன்று, திருவாங்கூர் அரச குடும்பத்தின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.

அதிகாரிகளிடம் விசாரித்த போது மூன்று கருவிகள் வேலைசெய்து கொண்டிருந்ததாகவும். நாலாவது கருவி மட்டும் சில சமயங்களில் வேலை செய்யாமலிருப்பதாக காவல்துறையினர் கூறியதாக தெரிவித்த டி.ஜி.பி, தொலைக்காட்சியில் வெளியான செய்தியின் அடிப்படையில் தான் சோதணை செய்வதற்கு வந்ததாகவும் குறைகள் இருப்பின் அவை உடனே சரி செய்யப்படும் என நேற்று வெள்ளிக்கிழமை, நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார்.



நீதிமன்ற உத்தரவுபடி, 150 வருட பழைமை வாய்ந்த இரு பெட்டகங்கள் அடுத்த மாதம் திறக்கப்பட இருக்கிறது. அதையொட்டி கோவிலை சுற்றிலும் சுவர்களில், மிகவும் பாதுகாப்புமிக்க கண்காணிப்புக்கருவிகள் பொருத்தப்பட இருப்பதாகவும், 200க்கு மேற்பட்ட காவல்துறையினர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மதக்கலவர தடுப்புச்சட்டம்- ஜெயலலிதா எதிர்பு..!






சென்னை. ஜூலை 29-
மத்திய அரசு கொண்டுவர இருக்கும் மதக்கலவர தடுப்புச்சட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேவையற்ற ஒன்று என எதிராக விமர்சனம் செய்திருக்கிறார்.

     ‘’மதக்கலவர தடுப்புச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்களிடையே, மத அடிப்படையில் வேறுபாடு உண்டாகும்’’ என்று கவலைப்பட்ட(?) ஜெயலலிதா  மேற்கொண்டு “மதக்கலவரத்தை மாநில அரசுகள் தடுக்க தவறிவிட்டால், மாநில அரசுகள் மீதும் எதிர்கட்சிகள் மீதும், மத்திய அரசு நேரிடையாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. இது மத்திய அரசு மாநில அரசுகளின் தன்னாட்சி உரிமைகளின் மீது குறுக்கிடுவதாக அமைந்துவிடும். எனவே மத்திய அரசு கொண்டுவர இருக்கும் இந்த சட்டத்தை அரசியல் கட்சிகள், பத்திரிக்கையாளர்கள், பொதுமக்கள் அணைவரும் சேர்ந்து எதிர்க்க வேண்டும்” என கேட்டுக்கொண்டிருக்கிறார்.



 அரசியல் லாபத்தை தேடிக்கொள்வதற்காக மக்களிடையே பகைமையை உண்டாக்கி உயிர்களை பலி கொள்ளும் மதக்கலவரங்கள் கடுமையாக வேரறுக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை, உலக ஞானத்தின் அடிமட்டத்திலிருக்கும் சாமானியன் கூட சொல்லுவான். ஆனால் மக்களின் நலனில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய, சிந்திக்க வேண்டிய தமிழக முதல்வரின் இந்த விமர்சனம் மிகவும் குழப்பமானதாகப் படுகிறது.

Thursday, July 28, 2011

மாவட்ட காவல்துறை மேலதிகாரிக்கு(DSP) இ.மெயிலில் புகார்களை தெரிவிக்கலாம்.




நெல்லை, ஜூலை 29-
மாவட்ட பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல்துறை மேலதிகாரிக்கு ( DSP ) தெரிவிக்க, வாரந்தோறும் திங்கள் கிழமை அன்று சிறப்புக்கூட்டங்கள் நடத்தப்பட்டுவருகிறது.

ஆனால்,வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருப்பவர்கள் அவர்களின் குறைகளை மாவட்ட காவல்துறை மேலதிக்காரிக்கு தெரிவிக்க, மாவட்ட காவல்துறை மேலதிகாரியின் அலுவலகத்திற்க்கு சிரமம் எடுத்து வரவேண்டிய அவசியம்
 இருக்கிறது.





இதற்காக  இணையதளத்தில் வசதி தரப்பட்டுள்ளது. இது ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் வசதியென்றாலும் பலருக்கு இது தெரியவில்லை. 
 http://www.tnpolice.gov.in/mailcomplaint.php
என்ற முகவரிக்கு நீங்கள் உங்களது புகார்களை பதிவு செய்யலாம்.



மேற்கொண்டு தேவைப்படும் தகவல்களுக்கு இந்த தொடர்பை கிளிக் செய்யவும்.

ராஜபக்சவை தண்டிக்க கோரி கையெழுத்து இயக்கம்! நடிகர் விஜய் கையெழுத்துப் போட மறுப்பு!




சென்னை. ஜூலை 28-
இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது.

இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

25.07.2011 அன்று திரைத்துறையை சார்ந்த சத்தியராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் முடிவு செய்தனர்.




சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு இடத்தில் இயக்குநர் சங்கர் இயக்கிவரும் நண்பன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த விஜய்யிடம், கையெழுத்து போடும்படி கேட்டனர். இதற்கு நடிகர் விஜய் கையெழுத்து போட மறுத்துவிட்டார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கூறியதாவது,



நடிகர் விஜய் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி கையெழுத்து போட மறுத்துவிட்டார்.

இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரை தொடர்பு கொண்டபோது அவர் கூறுகையில்,

உங்களைப் போலவே நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்றார்.

ராஜபக்ச கொலைக் குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர் என்றார்.

மேலும் பேசிய வன்னியரசு, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதைப் போல விஜய் மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறினார்.

விஜய் கையெழுத்துப் போட மறுத்திருப்பது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி- தமிழ்வின்.கம் (செய்தி மற்றும் புகைப்படங்கள்)

மேற்கண்ட செய்தி தொடர்பாக நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள், இலங்கையைச் சேர்ந்த லங்காஸ்ரீ வானொலிக்கு வழங்கிய பேட்டியின் பதிவை கீழே கேட்டறியலாம்.




Wednesday, July 27, 2011

நார்வே தாக்குதல்....நடந்தது என்ன?



ஜூலை27-
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் கடந்த 22ஆம் தேதி, அந்நாட்டு பிரதமர் அலுவலகத்தில் குண்டு வெடித்தது. அதை தொடர்ந்து 2மணி நேரத்திற்குள் ஒஸ்லோவின் அருகே உடொயா என்ற இந்த சிறு தீவில் இளைஞர்களுக்கான தொழிற்கட்சியின் கோடை முகாம் நடந்து கொண்டிருந்த வேளையில், போலிஸ்காரர் போல சீருடை அணிந்திருந்த நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.

ஒஸ்லோவின் மையப் பகுதியில் குறைந்தது 7 பேரை பலிகொண்ட ஒரு குண்டுத் தாக்குதலின் பின்னர் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது. குண்டுவெடிப்பில் 7 பேரும், மர்ம நபரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 85 பேரும், உயிரிழந்துள்ளனர்.
இந்த இரு சம்பவங்கள் 32 வயதுடைய அண்டர்ஸ் பெஹ்ரின் ப்ரெய்விக் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டுக்குள் நார்வே காவல்துறையினர் சோதனையும் நடத்தியுள்ளனர்.


இதை தொடர்ந்து அவனிடம் நடத்திய விசாரணையின் ஆரம்பத்தில், இச்சம்பவத்தில் யாருக்கும் தொடர்பில்லை. தான் மட்டுமே இந்த தாக்குதல்களில் ஈடுபட்டதாக அவன் கூறி வந்தான். பிரதமரை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவித்திருக்கிறான்.

இவனுடைய பேஸ்புக்கை ஆராய்ந்து பார்த்தபோது, ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்கங்களில் அவனுடைய தீவிரவாத கருத்துக்களையும், உலகில் தீவிரவாத போக்குடையோரைப் பற்றிய தகவல்களையும் பதிந்துவந்துள்ளது அறியப்பட்டது.

பிரெவிக் பற்றிய இணையப் பதிவுகளைப் பார்க்கும்போது அவர் தீவிர வலதுசாரி மற்றும் முஸ்லிம் எதிர்ப்புக் கொள்கைகளை உடையவர் என்று குறிப்புணர்த்துவதாக நார்வே காவல்துறையினர் கூறுகின்றனர்.

ஃபேஸ்புக்கில் அவர் தன்னைப் பற்றி எழுதுகையில் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்றும் மரபு பேணுபவர் என்றும் அவர் வருணித்துள்ளார். ஆனால் இது உண்மையான் கிறிஸ்தவத்திற்க்கு எதிரான கொள்கை என்றும், கிறிஸ்துவை உண்மையாக நம்புகிறவர்கள் இதை ஏற்றுக்கொள்ள முடியாது என பல கிறிஸ்தவ அமைப்புகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றன.

பிரெவிக் ஒஸ்லோவில் வளர்ந்து, பின்னர் நகரத்திலிருந்து வெளியேறி பிரெவிக் ஜியோபார்ம் என்ற ஒரு விவசாய நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார்.



காய்கறிகள் பயிர் செய்வதற்காக தொடங்கப்பட்ட அந்த நிறுவனத்துக்காக பெருமளவில் வாங்கப்பட்ட  உரங்களை அடிப்படையாக கொண்டு அவர் குண்டு தயாரித்துள்ளார் என்று நார்வே ஊடகங்கள் ஊகம் தெரிவிக்கின்றன.

இவர் சில வருடங்கள் முன்புதான் வலது சாரி தீவிரவாதக் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டிருந்தாரென்று இவரது நண்பர் ஒருவர் கூறுவதாக வெர்டென்ஸ் கங் என்ற நார்வே செய்தித்தாள் தெரிவிக்கிறது.

கருத்து பரிமாறுவதற்கான இணையதளங்களில் இவர் வலிமையான தேசியவாதக் கருத்துகளைக் கூறிவந்துள்ளார் என்றும் அப்பத்திரிகை கூறுகிறது.

தொடக்கத்தில் இந்த 2 தாக்குதல்களிலும் தனக்கு மட்டுமே பங்கு இருப்பதாக கூறி வந்த அவன் இதில் மேலும் 2 தீவிரவாதிகள் உடந்தை என்று தெரிவித்தான்.

இதில் மிகமுக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், தீவிரவாத போக்குள்ளவர்கள் அதற்கு காரணமாக இருப்பவர்களைத்தான் பலிகடா ஆக்குவார்கள், ஆனால் இந்த மனிதன் பிறர் மீதுள்ள ஆத்திரத்தில் தன் இனத்தின் மீதே கோபத்தைக் காட்டியிருக்கிறான். (வடிவேலு ஸ்டைல் எங்கெல்லாம் பரவியிருக்கப்பா....!)

நடந்த தாக்குதல்கள் 'கொடூர கனவுபோல இருக்கிறது' என நோர்வே பிரதமர் ஜென் ஸ்டொல்டன்பர்க் கூறியுள்ளார்.

ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பில் பிரதமரின் அலுவலகமும் சேதமடைந்திருந்தது. இவ்வெடிப்பில் கொல்லப்பட்டவர்களில் அரசாங்க அதிகாரிகளும் அடங்குவர்.

அவனை 8 வாரங்கள் காவல்துறையின் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார். முதல் 4 வாரங்கள் சிறையில் அடைத்து வைத்திருக்குமாறும்
விசாரணையின் போது அவனுக்கு வெளி உலகில் இருந்து எந்தவிதமான தகவல் தொடர்பும் இருக்ககூடாது என்றும் தனது உத்தரவில் அறிவுறுத்தி உள்ளார்.

அண்டர்ஸ் பெஹ்ரின் ப்ரெய்விக் தன் கருத்துக்களை பதித்துவந்த ஃபேஸ்புக்கை யாரோ ‘ஆட்டய’( hack)போட்டுவிட்டார்கள் என்பது சூடான செய்தி.

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons