Tuesday, July 5, 2011

கலைஞர் தொலைக்காட்சி விரைவில் மூடப்படுமா...? ’தெஹல்கா’ வெளியிட்ட தகவல்!!

வதந்திகளுக்கு மத்தியில், கலைஞர் டிவி ஊழியர்கள் ராஜினமா..!


சம்பளம் தாமதமாகிற இந்த வேளையில் 2ஜி மோசடியும் தங்களை பாதிக்கும் என கலைஞர் தொலைக்காட்சி ஊழியர்கள் கருதுகிறார்கள்.

2ஜி அலைஒதுக்கீட்டுப் பிரச்சனையில் வசமாக மாட்டிக் கொண்டிருக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கு புதிதாக ஒரு தலைவலி உண்டாகியிருக்கிறது.

 ஏகப்பட்ட சட்டபிரச்சனைகள் மத்தியில் போய் கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்த கலைஞர் டிவி இழுத்து மூடப்படப் போவதாக வதந்தி கிளம்பியுள்ளது. இந்த வதந்தியால் மிககுறுகிய காலத்தில் இதில் வேலை பார்க்கும் பலர், வேலையை ராஜினாமா செய்திருக்கிறார்கள். அதாவது, இரண்டு வாரத்தில் இருபதுக்கு அதிகமானோர்..!

’அமுலாக்க இயக்குனரகத்திலிருந்து வரப்போகும் அறிவிப்பினால், கலைஞர் டிவியின் பங்குதாரர்கள் வங்கிக்கணக்குகள் நிறுத்திவைக்கப் படவும், சேனலின் லைசென்ஸ் ரத்து செய்யப்படவும் கூடும். இதன் முடிவாக கலைஞர் டிவியை மூடியேத் தீரவேண்டிய நிலை உண்டாகலாம்’ என பெயர் சொல்ல விரும்பாத கலைஞர் டி.வி யின் உயர் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, சேனலின் உள்ளிருந்து கிடைத்திருக்கும் செய்தி என்னவென்றால், இவர்களின் குழு, அடுத்தவருடம் மே 26ஆம் தேதி புது சேனல் ஒன்றை ஆரம்பிக்கப் போவதாகவும், இந்த ஸ்தாபனத்தின் இயக்குனர் பி.அமிர்தம், பணியாளர்களுக்குக் கூட்டிய மூன்று நிமிட மினி மீட்டிங்கில், யாரும் கவலைப் படவேண்டாமென்றும், அவர்களின் குரூப் இன்னமும் இரண்டு சேனல்களை ஆரம்பிக்கப் போவதாகவும், அதற்கான லைசென்ஸை தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சரகத்திலிருந்து பெற்றுவிட்டதாக கூறப்பட்டது.

”ஆனாலும் இந்த சேனலில், எங்கள் வேலைக்கு பாதுகாப்பு இல்லாததாகவே உணர்கிறோம். தற்போதைய வேலைக்கு பதிலாகவே, புதிய சேனலைப் பற்றி இவர்கள் கூறுகிறார்கள். இதிலிருந்தே கலைஞர் டிவியைப் பற்றி இவர்களுக்கு கவலைப் பிறந்துவிட்டது தெளிவாகிறது” என்று  உள்ளேயிருந்து தகவல் கொடுத்தவர் கூறியிருக்கிறார்.

வேலையிலிருந்து ராஜினாமா கொடுத்திருப்பவர்களில் பெரும்பாலோர், தொழில் நுட்ப பிரிவில், நடுத்தர மட்டத்தில் வேலை பார்ப்பவர்கள். அதில் சிலருக்கு வேறு இடத்தில் ஏற்கனவே வேலை கிடைத்து விட்டதாம்.

கலைஞர் டிவி யில் சென்ற வருட உயர் ஊதியமாக 10 விழுக்காடு மட்டும் தான் கொடுத்தார்களாம்.

ஜூன் மாதம் கொடுக்க இருந்த உயர் ஊதியத்தை, ஊழியர்களுக்கு இனி அளிக்கப் போவதில்லை என நிர்வாகம் தீர்மானித்திருப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கலைஞர் டிவியை மூடிவிட்டு புது சேனல் திறக்கப்பட்டால், தங்களுக்கு கிடைக்கவேண்டிய கிராஜுடி கிடைககாமல் போய்விடுமோ என தொழிலாளர்கள் கவலைப்பட ஆரம்பித்து விட்டார்கள்.

முன்பெல்லாம் மாத துவக்கத்திலே கையில் கிடைத்துவந்த சம்பளம், 2ஜி அலைகற்றை விவகாரத்தின் சூடு, சேனலின் பக்கம் திரும்பியதிலிருந்து, சம்பளம் கிடைப்பது தாமதமாகி விடுகிறதாம், சில சமயம் கடைசி நேரத்தில் தான் கைக்கு வருகிறதாம்.

இந்தச் செய்திகளை எல்லாம் வெளியே கொண்டுவந்திருப்பது, பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் அதன் மந்திரிகள் எப்படியெல்லாம் கையூட்டு வாங்குகிறார்கள் என்பதை, துணிகரமான முறையில், ரகசிய கேமிரா மூலம் படம் பிடித்து ஊடகங்கள் மூலம் வெளிபரப்பிய ’தெஹல்கா’ குழுவினர்.

இந்த குழுவினர், கலைஞர் தொலைகாட்சியின் இயக்குனர் அமிர்தமிடம்  பல முறை தொடர்பு கொண்டும் பலிக்கவில்லை. ஆனால் கலைஞர் தொலைக்காட்சியினர், உறுதியாக புதிய உரிமம்  பெற்றிருப்பதாகவும், புதிய தொலைக்காட்சி சேனலின் பெயர் “கலைஞர் முரசு” என்றும், அது ஒரு திரைப்படதொலைக்காட்சி சேனலாக இருக்கும் என்றும், மிக விரைவில் செய்தி தொலைக்காட்சி ஒன்றையும் ஆரம்பிக்க உள்ளதாக, கலைஞர் தொலைக்காட்சியின், ஜெனரல் மேனஜர் ஃப்லோரெண்ட் பெரைரா மூலம் தகவல் கிடைத்திருக்கிறது.

கலைஞர் தொலைக்காட்சி பணியாளர்கள் பலர், தங்களது வேலையை ராஜினமா செய்திருப்பது குறித்த கேள்விக்கு, “ அதெல்லாம் கற்பனையில் உண்டான பொய், எங்களிடம் 5 சேனல்கள் இருக்கின்றன, எல்லாம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இங்கு எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், இன்னும் புதிய சேனலுக்காக காத்திருக்கிறார்கள், விரைவில் மகிழ்ச்சியுடன், ஆறாவது சேனலையும் ஆரம்பித்துவிடுவோம்” என்று கூறியிருக்கிறார்.

இப்போதைய சூழ்நிலை இந்த கதியில் உள்ளது என்றுதான் நாம் கூறமுடியும்.
முடிவு எப்படி இருக்கும் என்று அப்போதைய சூழ்நிலையால் மட்டுமே கூறமுடியும்.!








0 comments:

Post a Comment

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons