இந்தியாவை, ஊழல் இல்லா யோக்கியமான நாடாக மாற்ற போராட்டம், உண்ணாவிரதம் என்று ஓட்டமும் சாட்டமுமாக இருந்துவரும், பாபா ராம் தேவ்க்கு இந்த போராட்டத்தில் உறுதுணையாக இருந்துவரும் அவரது உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா பற்றிய வில்லங்கமான விசயம் ஒன்று வெளியாகி இருக்கிறது!
இவரின் பெற்றோர் நேபாளை சேர்ந்தவர்கள் என்றும், இவர் இந்திய குடியுரிமை பெற்றவர் என்பதும் பாலகிருஷ்ணாவை பற்றிய பொதுவான செய்தி. இதை அவரே ஒருமுறை வெளிப்படையாக கூறியிருந்தார். எப்போது என்றால், ராம் தேவ் டில்லியில், முறையான அனுமதி இன்றி போராட்டம் நடத்திய போது, காவல்துறையினர் நடத்திய லத்திசார்ஜினால் பெற்ற முதல் அனுபவத்தில், உடலில் சிற்சில பாதிப்புகளால், பயந்து போய், நேபாளத்திற்க்கு தப்பி ஓடிவிட்டதாக ஊடகங்கள் பரப்பிய பொய் செய்திக்குப் பதில் அளிக்கும் போது, தன்னுடைய பூர்வீகத்தைப் பற்றி கூறியிருந்தார்.
ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணா கொடுத்திருக்கும், இரண்டு முரண்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில், ஹரித்வார் நகராட்சி மன்ற அதிகாரிகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக சிபிஐ தன் விசாரணையை ஆரம்பித்துள்ளது. மேலும், பாலகிருஷ்ணா, தன் பெற்றோர்களின் குடியுரிமை பற்றி கொடுத்த உறுதிச்சான்றிதலும் தவறிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஹரித்வார் நகராட்சியில் உள்ள பிறப்பு இறப்பு குறிப்புகளை தேடிப்பார்த்த சிபிஐ யினர், பாஸ்போர்ட் பெருவதற்க்காக பொய்த் தகவல்களை பாலகிருஷ்ணா கொடுத்திருப்பதை குறித்த குற்றச்சாட்டின் பேரில், ஹரித்வார் நகராட்சியின் செயல் அலுவலரிடம் விசாரித்துவருகிறார்கள்.
சிபிஐ குழுவினர் இரண்டாம் முறை அங்குப் போய் பார்த்தபோது தான், மேற்படி ரெட்டை சான்றிதழ் விசயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
காவல்துறையினர் இது குறித்து கூறும்போது, ஒரு சான்றிதழில் பாலகிருஷ்ணாவின் பெற்றோர் இந்தியர் என்றும், மற்றொன்றில் நேபாளி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறினர்.
ஹரித்வார் நகராட்சி அதிகாரி பஜன்லால் ஆர்யாவிடம், ஒர் ஆங்கில செய்தித் தொலைக்காட்சியினர் தொடர்பு கொண்டு கேட்ட போது, ’சிபிஐ யினர் பாலகிருஷ்ணா சம்ப்ந்தப்பட்ட பத்திரங்களை தேடினர், 1997-ல் பாலகிருஷ்ணா தனது பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்க்கு கொடுத்திருந்த, அவர் பெற்றோரின் குடியுரிமை உறுதிச் சான்றிதழ், எங்கேயோ இடம் மாறிவிட்டது. அதற்காக சிபிஐ-யிடம் ஒரு வாரகால அவகாசம் கேட்டிருக்கிறோம். இந்த சான்றிதழை தேடுவதற்கென்றே ஒரு சிறப்புக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர்’. என தெரிவித்தார்.
மேலும்,’இறப்பு பிறப்பு பதிவு அலுவலகம்,1996-97ல் பல முறை மாற்றப் பட்டதால், அந்த சான்றிதழ் தவறுதலாக எங்கேனும் வைக்கப்பட்டிருக்கலாம்’ எனவும் ஆர்யா குறிப்பிட்டிருக்கிறார்.
ஆரம்பகால விசாரணை நடத்தப்பட்ட போது, பாலகிருஷ்ணாவிடம் ஒரே ஒரு பாஸ்போர்ட் மட்டும் இருந்ததாகவும், அது 2007ஆம் வருடம் பெப்ரவரி மாதம் 7ஆம் தேதி புதிப்பிக்கப்பட்டதாகவும், உள்ளூர் புலணாய்வுத்துறை அதிகாரி சஞ்ஞை பிஷோனி கூறியிருக்கிறார்.
பாபா ராம் தேவ்வின் நிறுவனத்திற்கு தேவையான பணத்தை நன்கொடை மூலம் ஈட்டித்தருபவர் இந்த பாலகிருஷ்ணா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பாலகிருஷ்ணா விசயத்தில் சிபிஐ காட்டும் இந்த வேகம், ராம்தேவை சிறிது கதிகலங்க வைக்கப் போகிறது. சின்னவர் விசயத்தில் இப்படி பிரச்சனை இருந்தால், பெரியவர் மூட்டையின் முடிச்சவிழ்க்கப் பட்டால் என்னென்ன வெளிவரப் போகிறதோ?
ஆனாலும், நியாயத்தின் தூதுவர்கள் போல் செயல் படும் சிபிஐ, சில சமயங்களில் அரசின் கையாட்களாக செயல் படுவது போல் படுகிறது.
0 comments:
Post a Comment