சென்னை. ஜூலை 22-
நீலகிரி மாவட்டம், ஊட்டியிலுள்ள வெலிங்டன் இராணுவப் பயிற்சி்க் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்தும், அதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மறியல் போராட்டம் நடத்தப்போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கை:
நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அருகே வெலிங்டனில் அமைந்துள்ள இந்திய இராணுவ பயிற்சிக் கழகத்தில் சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு பயிற்சியளிப்பதாக உறுதியான செய்திகள் வந்துள்ளது. இந்திய இராணுவம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தமிழர்களை அவமதிப்பதாகும்.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் நிராயுதபாணியாக இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மீது திட்டமிட்டுக் கனரக ஆயுதங்களையும் பயன்படுத்திக் குண்டுகள் வீசியும், விமானத்தைக் கொண்டு தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தியும் பல பத்தாயிரக்கணக்கான மக்களை சிங்கள இராணுவம் கொன்று குவித்துள்ளது என்றும், அது கடுமையான போர்க் குற்றம் என்றும் ஐ.நா.வின் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.
அதன் அடிப்படையில் உலக நாடுகள் அனைத்தும் இலங்கை அரசுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்று கோரிவரும் நிலையில், அந்நாட்டுப் படையினருக்கு இந்திய இராணுவம் பயிற்சி அளிக்கிறது என்றால், சிங்களப் படைகள் அப்படி எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று இந்திய அரசு கூறுகிறதா?
ஒரு சாவுக்கு இத்தனை பலிகளா? |
குற்றமற்ற இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல். |
தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் கால் நூற்றாண்டிற்கும் மேலாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி 543 மீனவர்களைக் கொன்ற இலங்கை அரசின் படைகளுக்கு பயிற்சி அளிக்க இந்திய இராணுவம் முற்பட்டுள்ளது என்றால், அதற்குப் பொருள் என்ன? மீனவர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இந்த தேசத்திற்கும், ‘இறையாண்மைக்கும்’ விடப்பட்ட சவால் அல்லவா? அந்நாட்டு கடற்படையின் நடவடிக்கைகளை நியாயமானது என்று இந்திய அரசும், இராணுவமும் கருதுகின்றனவா? இல்லை, இதுவரை சுட்டது சரியில்லை,
எங்களிடம் பயிற்சிப் பெற்றுச் சென்று, ஈழத் தமிழினத்தை அழித்ததுபோல், தமிழக மீனவர்களையும் கொத்துக் கொத்தாக கொன்று குவியுங்கள் என்று பயிற்சியளிக்கிறதா? இப்படி கூப்பிட்டுப் பயிற்சி கொடுப்பது ஏன்?தமிழக மீனவனை சிங்கள கடற்படை அழிப்பதை கண்டுகொள்ளாமல் இராணுவ உறவு பேணும் இந்திய அரசு, இதேபோல் இந்தியாவின் நகரங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் வருவதற்கு காரணமாக அது கருதும் பாகிஸ்தான் இராணுவத்தினருக்கும் இந்திய மண்ணில் பயிற்சி அளிக்குமா?
சிங்கள இனவெறி இராணுவத்தினருக்குப் பயிற்சி கொடுப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது? அவர்களுக்கு அண்டை நாடாக இருக்கக் கூடியது இந்தியா மட்டும்தான். அப்படியிருக்க அந்நாட்டு இராணுவத்திற்கு ஒப்பந்தம் போட்டு பயிற்சியளிக்க என்ன அவசியம் உள்ளது? ஈழத் தமிழினத்தை கொன்று குவித்தது போதாது, எதிர்காலத்திலும் அதற்கு அவசியம் ஏற்படும், அப்போதும் கொன்று குவிக்கத் தயாராகுங்கள் என்பதற்காக இந்திய இராணுவம் பயிற்சியளிக்கிறதா? ஈழத் தமிழினத்தை அழிப்பதற்குத் துணைபோன இந்திய அரசும், இராணுவமும், எதிர்காலத்திலும் அப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு துணை நிற்கும் என்பதற்கான அத்தாட்சியா இந்தப் பயிற்சித் திட்டம்?
இலங்கை அரசின் மீதான போர்க் குற்றச்சாற்று மீது பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ் மண்ணிலேயே சிங்கள இனவெறி இராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பது என்றால், இது தமிழனை சீண்டிப் பார்க்கும் செயலல்லவா?
இதனை உடனடியாக இந்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்திய அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சி பெரும் போராட்டத்தில் ஈடுபடும். ஈழத் தமிழினப் படுகொலைப் போரைத் தூண்டி விட்டதே மத்திய காங்கிரஸ் அரசுதான் என்பதற்கான ஆதாரங்கள் வெளிப்பட்டுள்ளன.
ஆதாரப்பூர்வமான அந்தக் குற்றச்சாற்றை நிரூபிப்பதுபோல் அந்நாட்டுடன் நட்புறவு கொண்டாடுகிறது இந்திய அரசு. இது தமிழ்நாட்டில் வாழும் 7 கோடித் தமிழர்களுக்கு விடப்பட்ட சவாலாகும். இதனை நாம் தமிழர் கட்சி நேரடியாக எதிர்கொள்ளும்.
இன்று மாலை நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கழகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அதையும் தாண்டி பயிற்சி நீடித்தால், இந்திய அரசு கடும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை நாம் தமிழர் கட்சி எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறது.
0 comments:
Post a Comment