Friday, July 1, 2011

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப ஸ்வாமி கோயிலில் தங்கப்புதையல்..!!!



கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப ஸ்வாமி கோயிலின் மூலவர் சன்னிதிக்கு அருகேயுள்ள ஆறு அறைகள் தற்போது உச்ச நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினரின் முன்பாக திறக்கப்பட்டு அதிலுள்ள தங்க ஆபரணங்கள் பட்டியலிடப்பட்டு வருகின்றன.

இந்த ஆறு அறைகளில் சில கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மூடிக் கிடக்கின்றன. தற்போது இந்த அறைகளில் இருந்து பல நூறு கோடி ரூபாய் அளவு பெருமானமுள்ள நகைகள் எடுக்கப்பட்டதாக இந்திய பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இது பற்றி அதிகாரபூர்வமாக எவ்வித கருத்துக்களையும் அதிகாரிகள் வெளியிடவில்லை என்று திருவனந்தபுரத்தில் உள்ள மலையாள மனோரமா தொலைக்காட்சி செய்தியாளர் சந்திரகாந்த் விஸ்வநாத், பிபிசி தொலைக்கட்சிக்கு தெரிவித்திருக்கிறார்.

அதே நேரம் இந்த நகைகளை பார்வையிட்ட ஒருவர், தங்க ஆபரணங்கள், வைரம் பதிக்கப்பட்ட நகைகள், தங்கத்தால் செய்யப்பட்ட கயிறு உள்ளிட்ட பல விலைமதிப்பான பொருட்கள் அந்த அறையில் இருந்ததாக தம்மிடம் தெரிவித்ததாக செய்தியாளர் சந்திரகாந்த் விஸ்வநாத் தெரிவித்தார்.

இந்தக் கோயிலின் மூலவரான பத்மநாப ஸ்வாமியின் சார்பிலேயே தாம் ஆட்சி புரிவதாக திருவாங்கூர் மன்னர்கள் கூறி வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்திரவின்படி கோயிலில் உள்ள நகைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றாலும் கோயிலின் வழமையான பூஜைகள் வழக்கம் போல் நடந்து வருகின்றன. இந்தக் குழுவினர் நகைகள் குறித்த விபரங்களை உச்ச நீதிமன்றத்தில் தெரியப்படுத்திய பிறகே இது பற்றிய அதிகார பூர்வத் தகவல்கள் தெரியவரும்.

0 comments:

Post a Comment

 
Design by Nellai Murasu Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Best Buy Coupons